ஜொகூர் பாரு, ஜூன் 14-
ஜொகூர் பாரு, ஜாலான் உங்கு மொஹ்சின் என்ற இடத்தில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை 8.50 மணியளவில் நிகழ்ந்த இக்கோர விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெற்கு ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ரவுப் செலாமாத் தெரிவித்தார்.
20 வயது உள்ளூரை சேர்ந்த அவ்விளைஞன் நகர மையத்திலிருந்து தம்போய்-யை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, சமிஞ்சை விளக்கில் நின்றுக் கொண்டிருந்த காரின் பின்புறத்தில் மோதி கீழே விழுந்ததை தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த லாரிக்கு அடியில் சிக்கியதாக ரவுப் செலாமாத் கூறினார்.
மேலும், 40 வயதிற்கு உட்பட்ட வாகனமோட்டி மற்றும் லாரி ஓட்டுநர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பியதாகவும் இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 41 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக ரவுப் செலாமாத் விவரித்தார்.








