ஈப்போ, தாமான் புந்தோங் ஜெயா, ருக்கூன் தெத்தாங்கா மற்றும் மலேசியா மடானி புந்தோங் சமூகத்தின் ஏற்பாட்டில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையில் சுதந்திர தினம் மற்றும் மலேசிய தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வியக்கத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான பி. பாலையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, மகளிருக்கான கோலம் தீட்டும் போட்டி, பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கான மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் அரசாங்க இலாகாக்களின் ஆதரவுடன் டிங்கி காய்ச்சல் தடுப்பு கண்காட்சி, சமூக நல இலாகா உதவிகள் பதிவு, சொக்சோ விளக்க உரைகள், காவல் துறை, தீயணைப்புத்துறை செயல்முறை விளக்கங்கள் உட்பட மக்கள் நன்மை அடையும் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்விற்கு பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் சிறப்பு வருகை புரிந்ததுடன் அவருடன் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் பவாணி ஆகியோரும் வருகை புரிந்து நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.
பி 40 பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்குதல், அதிர்ஷ்ட குலுக்கு, வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டனர்.
புந்தோங் ஜெயா மக்களிடையே ஒற்றுமை உணர்வை விதைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுதற்கு ஒத்துழைப்பு நல்கிய போலீஸ், தீயணைப்பு, சொக்சோ போன்ற அரசு பிரிவினக்கு இயக்கத் தலைவர் பி. பாலையா தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். அத்துடன் இப்பகுதியில் மண்டபம் மற்றும் அலுவலகம் கட்டப்படுவதற்கு தாங்கள் முயற்சிகள் குறித்தும் பாலையா விவரித்தார்.
பதினைந்தாவது ஆண்டாக நடத்தப்பட்ட இது போன்ற நிகழ்வு வருகின்ற காலத்திலும் தொடரும் என்று இயக்கத் தலைவர் பாலையா தமது உரையில் தெரிவித்தார்.








