நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஒன்றான, சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர்ரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, வரும் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 10-ஆம் தேதி வரை மிக விமரிசையாக நடைபெறவிருக்கிறது. இப்பெருவிழாவை முன்னிட்டு ஜூன் 24-ஆம் தேதி புதன்கிழமை முதல் தேவஸ்தானத்தின் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன.
ஆலயத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, ஜூன் 25-ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்ற விழாவுடன் முறைப்படி தொடங்குகிறது. அன்று காலை 10.45 மணிக்கு வேத மந்திரங்கள் மற்றும் தேவார இசை ஒலிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க பக்திப் பெருக்குடன் கொடியேற்றம் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இப்பெருவிழாவின் மிக முக்கிய உற்சவத் திருநாளான ஜூலை 4-ஆம் தேதி சனிக்கிழமை, பக்தர்களின் பரவசமூட்டும் பால்குடம் எடுத்தல் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. அன்று காலை 7.31 மணிக்கு, தாமான் துங்கு அம்புவான் நஜிஹாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துப் புறப்பட்டு, காலை 8.31 மணிக்கு ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தை வந்தடைவார்கள்.
திருக்கயிலாய பரம்பரை கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் மேலான ஆலோசனையின்படி நடைபெறும் இந்த மஹோற்சவ திருவிழா பூஜைகளில், நெகிரி செம்பிலான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி ஆன்மீகப் பெருமக்கள் அனைவரும் குடும்ப சகிதமாகத் திரளாகக் கலந்து கொண்டு, எம்பெருமான் ஸ்ரீ இராஜராஜேஸ்வரர் மற்றும் ஆதி பெரிய நாயகி அம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுமாறு தேவஸ்தான நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.










