சுங்கை பட்டாணி, தாமான் துங்கு ஹமினாவில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை 5 மணியளவில் அலோங் என சந்தேகிக்கப்படும் நபர்களால் சிவப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவத்தால் ஒரு குடும்பம் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட 53 வயது டான் லீ லிங் என்பவர், காலை 7 மணிக்கு வேலைக்குச் செல்ல முற்பட்டபோதுதான் தன் வீட்டின் சுவர் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு ஒரு மிரட்டல் கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. முகமூடி மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒருவர் பெயிண்ட் வீசிவிட்டு மிரட்டல் கடிதத்தை வைக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
தன் மகனின் கடன் பிரச்சனை காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறிய அவர், இதற்கு முன்பும் தங்களுக்கு போஸ்டர்கள் மற்றும் மிரட்டல் வீடியோக்கள் மூலம் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கோலா மூடா மாவட்ட போலீஸ் துறைத் தலைவர் உதவி ஹன்யான் ரம்லான் கூறுகையில், குற்றவாளிகளை அடையாளம் காண தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.











