மூன்று இராணுவ வாகனங்கள் உட்பட நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 10.20 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கெடா, குருன் அருகில் நிகழ்ந்தது.
30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று இராணுவ வீரர்களும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டதாக குவார் செம்பெடாக் தீயணைப்பு நிலையத் தலைவர் முஹமாட் ஃபௌசி ரசாலி தெரிவித்தார்.
தகவல் கிடைத்து, பென்டாங் தீயணைப்பு நிலையத்தைச சேர்ந்த ஆறு வீரர்களின் உதவியுடன் விரைந்த தீயணைப்புப்படையினர், மூன்று இராணுவ வாகனங்களும், Isuzu ரகத்தில் ஒரு லோரியும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி, தடம்புரண்டு கிடப்பது தெரியவந்தது. இவ்விபத்தில் நால்வர் சிக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்தது என்று முஹமாட் ஃபௌசி குறிப்பிட்டார். .
. மூன்று இராணுவ வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த போது ஓர் இராணுவ வாகனம் பழுதடைந்தது.
பழுதடைந்த வாகனத்தை சரி செய்வதற்காக மூன்று இராணுவ வீரர்கள் கீழே இறங்கிய போது அவ்வழியே வேகமாக வந்ததாக கூறப்படும் Isuzu ரக லோரி ஒன்று அவர்களை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் மூன்று வீரர்கள் உயிரிழந்த வேளையில் 31 வயது லோரி ஓட்டுநர் , கடும் காயங்களுடன் சுல்தானா பஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.








