Perak, Gerik அருகே கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிச் சென்றதற்காக அதன் ஓட்டுநர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவலாகியதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 36 வயது அந்த பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக Konsurtium E-Mutiara Bhd நிறுவனத்தின் தலைவர் Che Ibrahim Che Ismail அறிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுக்காலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அப்பேருந்து ஓட்டுநர் இத்தகைய செயல்களை புரிந்த காரணம் குறித்து விளக்கமளிப்பதற்காக அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பதாக Che Ibrahim கூறினார்.
சம்பந்தப்பட்ட நபரை Gerik மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போலீசார் விசாரணைக்கு அழைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக, இரட்டை வழி சாலையில் மற்ற பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் முன்னாள் சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்றை விரைவு பேருந்து முந்தி செல்வதற்கு முற்பட்டதாக காணொளி ஒன்று வைரலாகியது குறிப்பிடத்தக்கது.








