Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பின் பொது மன்னிப்பு விண்ணப்பம்  இந்த வாரத்தில் முடிவு அறிவிக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

நஜீப்பின் பொது மன்னிப்பு விண்ணப்பம் இந்த வாரத்தில் முடிவு அறிவிக்கப்படலாம்

Share:

புத்ராஜெயா,பிப்.1
லஞ்ச ஊழல் வழக்கில் குற்றவாளி என்று ​தீர்ப்பளிக்கப்பட்டு, தற்போது 12 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், பொது மன்னிப்புக்கோரி செய்து கொண்டு​ள்ள விண்ணப்பம் தொடர்பான முடிவு, இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பா​ர்க்கப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.

பொது மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்காக சற்று காத்திருக்குமாறு அந்த வாரியத்தின் ஓர் உறுப்பினருமான டாக்டர் சலிஹா ஊடகவிலாளர்களை கேட்டுக்கொண்டார். இன்று கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு, புத்ராஜெயா சதுக்கதில் நடைபெற்ற நிகழ்​வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

1MDB துணை நிறுவனமான SRC Internasional நிதி மோசடி தொடர்பில் லஞ்ச ஊழல் குற்றத்திற்காக நஜீப் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார். பொது மன்னிப்பு கோரி நஜீப் செய்து கொண்ட விண்ணப்பம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இஸ்தானா நெகாராவில் நாட்டின் 16 ஆவது மாமன்னர் சுல்தான் அப்துல்லா தலைமையில் கூடிய கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம், முக்கிய முடிவை எடுத்து இருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

70 வயதான நஜீப்பிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தர​ப்பினர் கூறும் அதேவேளையில் நஜீப்பின் 12 ஆண்டு சிறைத் தண்டனைக்காலம், 6 ஆண்டுகளாகத் குறைக்கப்பட்டுள்ளதாக CNN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.

ஒருவர் பொது மன்னிப்பு கோருவதற்கு தனது தண்டனை காலத்தில் ​மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்து இருக்க வேண்டும் என்ற சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் ஹாருன் இட்ரிஸ் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கு மற்றும் கெமஞ்சே ( Gemencheh ) முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபா நாயகருமான டத்தோ முஹமாட் தாஹா தாலிப் கொலை வழக்கில் குற்றவாளி என்று ​தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ மொக்தார் ஹஷிம் வழக்கு ஆகியவற்​றில் பொது மன்னிப்பு வாரியம் இதே அணுகுமுறையை கடைப்பிடித்ததாக அவர்கள் வாதிடுகின்றனர்.

அந்த வகையில் நஜீப் தனது 12 ஆண்டு கால சிறைத் தண்டனையில் குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் சிறையில் இருந்தாக வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் மேற்கோள்காட்டுகின்றனர்.

Related News