சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழக மலேசியாவிற்கு, நேற்று இரவு வந்த மர்மமான வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அக்கட்டிடம் முழுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
இது குறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட விரிவான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அப்பல்கலைக்கழக வளாகத்தின் அனைத்து செயல்பாடுகளும் இன்று முதல் வழக்கம்போல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
அதேவேளையில், ஜோகூரிலுள்ள மோனாஷ் கிளினிக்கல் ஸ்கூல் ஜொகூர் பாரு வளாகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டே இருக்கும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்றாலும், வெடிகுண்டு மிரட்டலின் தன்மை குறித்தோ அல்லது பாதுகாப்பு சோதனைகளின் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்தோ மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.








