ஈப்போ, ஜூன்.04-
கம்பாரில் புதிய மருத்துவமனை 26 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிட்டபடி நிர்மாணிக்கப்படும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கம்பார் மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை வெளியிட்டார். கம்பார் அருகே உள்ள கம்போங் சங்காட் பாரு பகுதியில் இதற்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையான நிதி, வருகின்ற வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் டத்தோ சிவநேசன் கூறினார்.

முன்னதாக 2019ஆம் ஆண்டு பட்ஜெட்டிலேயே இதற்காக 500 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், முந்தைய அரசு தேர்வு செய்த நிலம் சுரங்கக் குழிகள் நிறைந்து கட்டுமானத்திற்கு தகுதியற்றதாக இருந்ததால் இத்திட்டம் தாமதமானது என அவர் விளக்கமளித்தார். எனவே இத்தாமதத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், கடந்த மே 23 அன்று பெய்த கனமழை, பலத்த காற்று மற்றும் குரங்குகளின் தொல்லையால் 80 ஆண்டுகள் பழமையான தற்போதைய மருத்துவமனையின் கூரையில் கசிவு ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட டத்தோ சிவநேசன், தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக அதனைச் சீரமைத்ததாகவும், அவசரச் சிகிச்சை பிரிவு எவ்வித பாதிப்பும் இன்றி வழக்கம் போல இயங்கியதாகவும் கூறி மருத்துவப் பணியாளர்களைப் பாராட்டினார்.








