ஷா ஆலாம், ஜூன்.04-
கோலாலம்பூர் அனைத்து மக்களுக்குமே சொந்தமானது என்றும், அதன் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான முடிவுகள் மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மேன்மை தாங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை இஸ்தானா நெகாராவில் மாமன்னரை தாம் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் என்ற முறையில் தம்மிடம் இதனை வலியுறுத்தியதாக ஹான்னா இயோ தெரிவித்தார்.
நாட்டின் தலைநகரின் பசுமைப் பகுதிகள் மற்றும் நீர்த்தேக்கக் குளங்களைப் பாதுகாப்பதற்கான சீர்திருத்தங்கள் குறித்து மாமன்னருக்கு விளக்கம் அளித்ததாக ஹான்னா இயோ குறிப்பிட்டார்.
அப்போது, பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை அரசிதழில் வெளியிடும் பணிகளைத் தாமதப்படுத்தக்கூடாது என மாமன்னர் வலியுறுத்தினார் என்றும் மாமன்னரின் இந்த அறிவுரைகள் தலைநகரின் நிர்வாகத்தை மேம்படுத்த வழிகாட்டியாக இருக்கும் என்றும் ஹான்னா இயோ தனது முகநூல் பதிவில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.








