ஷா ஆலாம், ஜூன்.04-
மலேசியாவில் ரோஹிங்கியா அகதிகளுக்கு மனிதநேய அடிப்படையில் தொடர்ந்து உதவ வேண்டும்; ஆனால், அது அவர்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு அல்லது குடியுரிமை வழங்குவதற்கான கடப்பாடாகக் கருதப்படக்கூடாது என்று அம்னோ மகளிர் பிரிவு செயற்குழு உறுப்பினர் டத்தோ நூருல்ஹிடாயா அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா விவகாரத்தை மனிதநேயம் மற்றும் நாட்டின் இறையாண்மை ஆகிய இரு கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அகதிகளுக்கு அடிப்படைப் பாதுகாப்பும் உணவும் வழங்குவது அவசியமானது என்றார்.
எனினும், குடியுரிமை வழங்குவது என்பது நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத் திறன் மற்றும் உள்ளூர் மக்களின் நலன் சார்ந்து அரசாங்கம் மட்டுமே எடுக்கக்கூடிய தனிப்பட்ட முடிவாகும் என்று அவர் வலியுறுத்தினார். பொது வசதிகளுக்கான தட்டுப்பாடு, வேலை வாய்ப்புப் போட்டி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மலேசிய மக்களிடையே நிலவும் கவலைகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.








