Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக மந்திரி பெசார் அமினுடின் ஹாரூன் அறிவிப்பு /  அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக மந்திரி பெசார் அமினுடின் ஹாரூன் அறிவிப்பு / அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

Share:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் இன்று ஜுன் 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அடுத்த 60 நாட்களுக்குள் 16-ஆவது மாநிலத் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

மாநில சட்டமன்றமானது அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமினுடின் ஹாரூன் இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதேவேளையில், சட்டமன்றத்தைக் கலைக்க தான் விடுத்த கோரிக்கைக்கு மேன்மை தங்கிய மாநில சமஸ்தானபதி, யாங் டி-பெர்துவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமினுடின் ஹாரூனின் இந்த அறிவிப்பானது, கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஜோகூர் மாநில சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றமும் கலைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசியலமைப்பின் படி, அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, 16-வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலானது, வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும்.

'ஒற்றுமை அரசாங்கத்தின்' அதிகாரப் பகிர்வு மாதிரியைப் பின்பற்றி, நெகிரி செம்பிலான் மாநிலமானது பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகிய இரண்டு தனித்தனி அரசியல் கூட்டணிகளால் கூட்டாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.

36 இடங்களைக் கொண்ட இம்மாநிலச் சட்டமன்றத்தில், பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்களும், பாரிசானின் அம்னோவைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நெகிரி செம்பிலானில் இதற்கு முன்பு 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாநிலத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related News