Sep 25, 2026
Thisaigal NewsYouTube
"கடனாக வழங்கப்பட்ட ஒவ்வொரு சென் காசும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்" – மாரா தலைவர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

"கடனாக வழங்கப்பட்ட ஒவ்வொரு சென் காசும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்" – மாரா தலைவர் திட்டவட்டம்

Share:

கல்விக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தத் தவறும் மாணவர்களிடம் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று மாரா எனப்படும் மஜ்லிஸ் அமானா ராக்யாட் கல்வி நிறுவனத்தின் தலைவர் அஷ்ரப் வஜ்டி டுசுகி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய பணமே கல்விக் கடனாக வழங்கப்பட்டிருப்பதால், அந்த நிதியிலுள்ள ஒவ்வொரு சென் காசையும் மீட்டெடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாரா தலைவராக தாம் பொறுப்பேற்றதிலிருந்து, கடன் தவணையை செலுத்தத் தவறும் மாணவர்களை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இது குறித்து தாம் மாரா கவுன்சில் நிர்வாகத்திற்கு தெளிவான உத்தரவு வழங்கியுள்ளதாகவும், எந்தவொரு செல்வாக்கு மிக்க நபராயினும், அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் கடன் விலக்கு கோரிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாராவுக்கு செலுத்த வேண்டிய 8 லட்சத்து 57,000 கல்விக் கடனை திருப்பிச் செலுத்துவதில், ஒரு பெண்ணும் அவரது மூன்று உத்தரவாததாரர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை சுங்கை பட்டாணி உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அஷ்ரப் வஜ்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Related News