ஸ்பெயின்–அர்ஜென்டினா ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் நேற்று டத்தாரான் மெர்டேக்காவில் திரண்ட நிலையில், போட்டி முடிந்த பின்னர் அப்பகுதி முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடப்பது குறித்து கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான டீபிகே எல்வருத்தம் தெரிவித்துள்ளது.
கால்பந்தாட்டத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை வரவேற்றாலும், நாட்டின் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் டத்தாரான் மெர்டேக்காவை குப்பைகளால் நிரப்பிவிட்டு சென்றது ஏமாற்றமளிப்பதாக டீபிகேஎல் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றுவார்கள் என்றாலும் கூட, கோலாலம்பூரின் தூய்மை எப்போதும் பணியாளர்களை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது என்றும், பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் டீபிகேஎல் வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பல இணையவாசிகள் பொதுமக்களின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சுய பொறுப்புணர்வை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.








