குவாந்தானின் ஆயர் பூத்தே பகுதியில் வாடகை வீட்டில் 19 வயது மாணவி ஒருவர் சுயநினைவின்றி கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், பொறாமையே அவரது மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா பாலிடெக்னிக்கில் பயின்ற அந்த மாணவியும் அவரது காதலரும் சுமார் ஓராண்டாக ஒருவரையொருவர் அறிந்திருந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மூன்று பேரிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, காதல் ஜோடிக்கிடையே ஏற்பட்ட தவறான புரிதலே இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவியின் காதலன் அவசர அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அம்மாணவி படுக்கையில் சுயநினைவின்றி கிடந்ததுடன், கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான தடயங்களும் காணப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக 19 வயதான காதலன் கைது செய்யப்பட்டு, கொலை தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில் அக்டோபர் 12 -ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








