Dec 2, 2025
Thisaigal NewsYouTube
யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே
தற்போதைய செய்திகள்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.02-

மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் படை ரிசர்வ் அதிகாரி பயிற்சி மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின், மரணம் ஒரு கொலையே என்று சட்டத்துறை அறிவித்துள்ளது. மர்மமான முறையில் உயரிழந்த அந்த மாணவனின் மரணம் குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை நடத்துமாறு சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை சி.ஐ.டி. இயக்குர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

மாணவனின் மரணம் தொடர்பான விசாரணையின் முடிவு குறித்து சட்டத்துறை அலுவலகத்திற்கு அளிக்கப்பட்ட விளக்கத்திற்குப் பின்னர் மாணவனின் மரணம் ஒரு கொலையே என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் அந்த மாணவனின் மரணத்திற்கு காரணமான நபர்கள் குறித்து தொடர்ந்து புலன் விசாரணை செய்யப்படும் என்று டத்தோ குமார் தெரிவித்தார்.

22 வயதுடைய கெடெட் பயிற்சி மாணவனான ஷாம்சுல், கடந்த ஜுலை மாதம் 28 ஆம் தேதி ஜோகூர், உலு திராமில் உள்ள இராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று கொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரின் இறப்பு, திடீர் மரணம் என்று போலீசார் வகைப்பபடுத்தினர்.

எனினும் தனது மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது மரணத்திற்குக் காரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் தாயார் Ummu Haiman Bee Daulatgun புகார் அளித்ததன் பேரில் அந்த மாணவனின் உடலைத் தோண்டி இரண்டாவது சவப் பரிசோதனை நடத்துவதற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோலாலாம்பூர் பெரிய மருத்துவமனையில் நடந்த இரண்டாவது சவப் பரிசோதனையில் அந்த மாணவனின் உடலில் பலத்த காயங்கள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.

Related News