புடி டீசல் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியானவர்களின் விவரங்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறையை, மற்ற குடும்ப உறவினர்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்த கோரிக்கைகளை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஆய்வு செய்து வருகிறது.
தற்போது இந்த மானிய விவரங்களை மாற்றும் நடைமுறை கணவன்/மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புகள் போன்ற நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்று சரவாக் மாநில அமைச்சின் இயக்குநர் மேத்யூ டொமினிக் பாரின் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 முதல் நாடு தழுவிய அளவில் புடி டீசல் திட்டத்தின் கீழ் மானிய விலையிலான டீசல் ஒரு லிட்டர் RM2.10க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் இந்த கவலைகள் மற்றும் கேள்விகள் குறித்து அமைச்சு பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
மேலும், சரவாக்கில் மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் தகுதி பெற்றுள்ள 37,880 வணிக வாகனங்களில் 26,000க்கும் அதிகமான வாகனங்கள் ஏற்கனவே இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தகுதியுள்ள பிற வாகன உரிமையாளர்களும் மைசப்சிடி இணையதளம் வழியாக விண்ணப்பித்து இந்த மானியத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள 23 வாகனப் பிரிவுகளுடன் தற்போது நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜீப் மற்றும் பிக்கப் ரக தனியார் வாகனங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.








