யயாசான் அகால்புடி அறவாரியம் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கில் 47 குற்றச்சாட்டுகளிலிருந்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டது மீதான சர்ச்சை தொடர்ந்து நிலவி வரும் வேளையில் சட்டவிரோதப் பண மாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக தாம் எதிர்நோக்கியுள்ள 17 குற்றச்சாட்டுகளை ரத்து செய்யும்படி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஓர் விண்ணபத்தை தாக்கல் செய்துள்ளார்.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 17 குற்றச்சாட்டுகளும் குறைபாடுகள் நிறைந்தவை என்றும், அவை அடிப்படையற்றவை என்றும், தம்மை அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ரோஸ்மா மன்சோர் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரோஸ்மாவிற்கு எதிரான 17 குற்றச்சாட்டுகளையும் அகற்றும்படி கோரும், விண்ணப்பம் மீதான நகல், நேற்று பிராசிகியூஷன் தரப்புக்கு வழங்கப்பட்டு விட்டதாக ரோஸ்மாவின் வழக்கறிஞர் ராஜீவன் நம்பியார் தெரிவித்தார். இதனை துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் பொஹ் யிஹ் தின் உறுதிப்படுத்தியுள்ளார்.







