மலேசியாவின் பாதுகாப்பு மற்றும் முறையான புலம்பெயர்ந்தோர் நிர்வாகத்தை உறுதி செய்ய, நாட்டில் உள்ள அகதிகள் மற்றும் ஐ.நா. தூதரக அட்டை வைத்திருப்பவர்களைப் பதிவு செய்யும் நடைமுறையை குடிநுழைவுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சைபுடின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் உள்ள அகதிகளின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் பின்னணி குறித்த முழுமையான தரவுகள் அரசாங்கத்திடம் இல்லை. இந்த நிலை தொடரக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய சைபுடின் , "இந்த பயோமெட்ரிக் பதிவு நடைமுறை அகதிகளுக்கு குடியுரிமையோ அல்லது நிரந்தர வசிப்பிட உரிமையோ வழங்குவதற்காக அல்ல. நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இன்றி, முறையான தரவுகளைச் சேகரித்து அகதிகள் விவகாரத்தை ஒழுங்குபடுத்துவதே இதன் நோக்கமாகும்" எனத் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.








