மலேசியாவில் கவர்ச்சிக்கரமான சம்பளத்தில் வேலை செய்து கொண்டே உயர் கல்வி பயிலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறி, கோலாலம்பூருக்கு வரவழைக்கப்பட்ட தன்சானியா நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் , விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு, கட்டாய பாலியல் தொழிலாளராக மாற்றப்பட்ட நிலையில் அந்த இளம் பெண்ணை மலேசிய குடிநுழைவு இலாகா பாதுகாப்பாக மீட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மாநகரில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்ட குடிநுழைவுத்துறை அதிகாரிகள், Madam என்ற அழைக்கப்பட்ட தன்சானியா நாட்டைச் சேர்ந்த ஒரு மாதுவை கைது செய்த போது, கூடவே தான்சானியா நாட்டைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணும் மீட்கப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.
விபச்சார கும்பல் ஒன்றின் பிடியில் சிக்கி, தனது கடப்பிதழை பறித்துக்கொண்ட நிலையில் கட்டாய பாலியல் தொழிலாளராக ஈடுபடுத்தப்பட்ட அந்த தான்சானியா இளம் பெண், உடனடி இடைக்கால பாதுகாப்பு ஆணைப் பெற்றப்பட்டு , பாதுகாப்பு இல்லத்தில் அடைக்கலம் வைக்கப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்லின் குறிப்பிட்டார்.
முதலில் வீட்டின் கதவை திறக்க முடியாது என்று 32 வயது தன்சானியா மாது மறுத்து விட்டதைத் தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த போது அந்த மாதுவின் பிடியில் அந்த இளம் பெண் சிக்கியிருப்பது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து இளம் பெண்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு வழங்குவதாக கூறி, அவர்களை 32 வயது மாதுவும், அவரின் பின்னணியில் உள்ள கும்பலும் விபச்சாரத்தல் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தள்ளது என்று ருஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.








