கோலாலம்பூரில் உள்ள ஒரு கட்டடப்பகுதியில் பாதுகாவலருக்கும், உணவு விநியோகிப்பு பணியாளருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கை தயாரித்து விட்டதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
பாதுகாவலரும், உணவு விநியோகிப்பாளரும் தரையில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு, கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்ட காட்சி தொடர்பான காணொளி ஒன்று, சில தினங்களுக்கு முன்பு சமுக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கைகலப்பு தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் 23 பேர், போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டு விட்டதால் சட்டத்துறை அலுவலகத்தின் முடிவுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் உறுதி அளித்துள்ளார்.








