Jul 8, 2026
Thisaigal NewsYouTube
கல்வி கற்ற சமுதாயம்; அனைத்து இன மக்கள் நலன் - பாலோவை முன்மாதிரித் தொகுதியாக மாற்ற டாக்டர் ரூபன் உறுதி
தற்போதைய செய்திகள்

கல்வி கற்ற சமுதாயம்; அனைத்து இன மக்கள் நலன் - பாலோவை முன்மாதிரித் தொகுதியாக மாற்ற டாக்டர் ரூபன் உறுதி

Share:

“ஒரு மனிதனின் அடிப்படை உயர்வுக்கு கல்வியே அஸ்திவாரமாகும். அதனை நாம் தந்துவிட்டால், அவர்கள் இயல்பாகவே வாழ்க்கையில் உயர்வடைவார்கள். எனவே, பாலோ சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரு கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் எனது முழு கவனமும் இருக்கும்” என பாலோ சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ரூபன் ஆறுமுகம் உறுதியளித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாலோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் ரூபன், தொகுதி மக்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுத் தி ட்டங்கள் குறித்து விவரித்தார்.

அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வாக்குறுதிக்கு இணங்க, பாலோ தொகுதியில் உள்ள பி40 எளிய குடும்பங்களைச் சேர்ந்த எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு இலவச டியூஷன் கல்வி வழங்குவது தமது தேர்தல் கொள்கை அறிக்கையின் முக்கிய அங்கமாகும். கல்வி கற்ற, திறன் பெற்ற மாணவர்களையும் இளைஞர்களையும் உருவாக்குவதே தமது முதன்மை வேள்வியாகும் என்று டாக்டர் ரூபன் விவரித்தார்.

பாலோ தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான இடிஎஸ் அதிவேக ரயில் சேவை திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இவ்வேளையில் எனது நெஞ்சார்ந்த நன்றியைக் கடமைப்பட்டுள்ளேன். இத்திட்டம் பாலோவின் பொருளாதார மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும் என்று டாக்டர் ரூபன் குறிப்பிட்டார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுபவர் அனைத்து இனத்தவர்களின் நலனுக்கும் பாடுபட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நமது இந்திய சமூகத்தினரின் தேவைகளுக்கு உரிய முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில், பிற இனத்தவர்களின் நலன்களையும் பேணிக் காக்கும் பொறுப்பும் கடப்பாடும் எனக்கு உள்ளது என்றார் டாக்டர் ரூபன்.

பாலோ தொகுதி வாக்காளர்களே, கல்வி, மேம்பாடு மற்றும் இன நல்லிணக்கத்தின் வழி ஒரு முன்மாதிரியான தொகுதியாக பாலோவை மாற்றிக் காட்ட எனக்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள். பாலோவில் ஒரு புதிய விடியலை உருவாக்க, வருகின்ற மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் எனக்கு உங்களது பேராதரவை நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்," என டாக்டர் ரூபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

கல்வி கற்ற சமுதாயம்; அனைத்து இன மக்கள் நலன் - பாலோவை முன்... | Thisaigal News