மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தொடர்புடைய விவகாரங்கள் உட்பட, கார்ப்பரேட் மாஃபியா குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஆர்சிஐ எனப்படும் அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யத் தயாராக உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான விசாரணை ஆணையம் அமைப்பதில் அரசாங்கம் திறந்த மனப்பான்மையுடன் அணுகுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சைட் நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட எழுத்துப்பூர்வ பதிலில், ஆர்சிஐ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்றும், ஆனால், அது குறித்த எந்தவொரு முடிவும் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு இணங்கவும், தற்போது போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையின் முடிவுகளையும் கருத்தில் கொண்டே எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தற்போது சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் கிடைக்கும் உண்மைகள், கண்டறியப்பட்ட தகவல்கள் மற்றும் அண்மைய முன்னேற்றங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
'கார்ப்பரேட் மாஃபியா' குறித்த குற்றச்சாட்டுகள் முதலில் ஒரு தகவல் வெளியீட்டாளர் வலைப்பதிவில் வெளியாகி, பின்னர் புளூம்பெர்க் வெளியிட்ட விசாரணை அறிக்கைகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தின.
நாட்டில் செல்வாக்கு மிக்க சிலர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுடன் கூட்டாகச் செயல்பட்டு நிறுவன கையகப்படுத்தல்களில் முறைகேடு செய்ததாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டுகள் தற்போது அதிகாரப்பூர்வ விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.








