முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கியின் பங்கு முதலீடு தொடர்பான விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடக்கூடிய ஆவணங்கள் அல்ல என்று சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை, அசாம் பாக்கி மேற்கொண்ட பங்கு பரிவர்த்தனைகள் மற்றும் அவரது பங்கு முதலீட்டின் மொத்த மதிப்பு குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கோரப்பட்ட தகவல்கள் விசாரணை ஆவணங்களின் ஒரு பகுதியாக இருப்பதாலும், சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் சொத்து அறிவிப்பு விவரங்களாக இருப்பதாலும், அவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கான ஆவணங்களாக கருதப்பட முடியாது என்றும் அசலினா ஒத்மான் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் பாக்கி, அரசு ஊழியர்களுக்கான பங்கு முதலீட்டு விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாங்க விதிப்படி, அரசு ஊழியர்கள் மலேசிய நிறுவனங்களில் ஒரு லட்சம் ரிங்கிட் மதிப்புக்கு மேல் அல்லது நிறுவனத்தின் 5 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.








