டெலிகிராம் செயலியின் மூலம் ஆபாச உள்ளடக்கங்களை விற்பனை செய்து, வர்த்தக லாபம் ஈட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட, பலகார வியாபாரி ஒருவருக்கு சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 30,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
குற்றம்சாட்டப்பட்ட 24 வயதான பிரான்லி முகமது தாஹா என்ற அந்த ஆடவர், அபராதத்தைச் செலுத்தத் தவறினால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி அகமது ஃபுவாட் ஒத்மான் உத்தரவிட்டார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி, இரவு 8:44 மணியளவில், மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தைச் சேர்ந்த மாறுவேடமிட்ட அதிகாரியிடம், “பேபி சேனல் லைஃப்டைம்” எனப்படும் டெலிகிராம் குழுவின் வாயிலாக ஆபாச உள்ளடக்கத்தை அணுகும் வசதியை, பிரான்லி தெரிந்தே வழங்கினார் என்றும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.








