Oct 16, 2026
Thisaigal NewsYouTube

உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு பினாங்கில் நடைபெறவிருக்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு பினாங்கில் நடைபெறவிருக்கிறது

பினாங்கு, ஜன. 2-


உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு வரும் நாளை மறுநாள் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் பினாங்கு, டேவான் ஸ்ரீ பினாங் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

மாநாட்டின் தொடக்கவிழா ஜனவரி 4 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இந்த தமிழ் வம்சாவளி மாநாட்டை பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோ அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்கவிருக்கிறார்.

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்கு சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு குறு,சிறு,நடுத்ததர தொழில் கூட்டமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

சிறப்பு அழைப்பாளர்களாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் முன்னாள் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

11 ஆவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு, சென்னைக்கு வெளியே கடல் கடந்து, முதல் முறையாக பினாங்கில் நடைபெறுகிறது என்று மாநாட்டின் உபசரணை இணை ஏற்பாட்டாளர் என்ற முறையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் மலேசிய வர்த்தகர்களை ஒன்றிணைத்து, தங்கள் வர்த்தகத் துறையை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பினையும் வழங்கும் ஒரு கண்காட்சியாகவும் இந்த மாநாடு அமையவிருக்கிறது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு விவரித்தார்.

தமிழ் வம்சாவளி தொடர்புடைய நிகழ்ச்சியாகவும் இது அமையவிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர், வர்த்தக சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு சாரா இயக்கப்பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளவிருக்கும் இந்த மாநாட்டில் பெண்களுக்கான தலைமைத்துவ ஆய்வரங்கமும் நடைபெறவிருப்பதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

தமிழுக்காக நடத்தப்படும் இந்த இரண்டு நாள் மாநாட்டிற்கு வர்த்தகர்கள் உட்பட தமிழ்மொழி, தமிழினம், தமிழ் கலாச்சாரம் பற்றுள்ள அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →