Apr 17, 2026
Thisaigal NewsYouTube
கைபேசி தகராறு: உடன்பிறந்த சகோதரனை கொலை செய்த பெண்ணிற்கும், அவரது காதலனுக்கும் தண்டனை
தற்போதைய செய்திகள்

கைபேசி தகராறு: உடன்பிறந்த சகோதரனை கொலை செய்த பெண்ணிற்கும், அவரது காதலனுக்கும் தண்டனை

Share:

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தைப்பிங், கமுந்திங், தாமான் கிளென்வியூ குடியிருப்புப்பகுதியில் கைபேசி தொடர்பான தகராறில் தைப்பிங், கிங் எட்வர்ட் இடைநிலைப்பள்ளி மாணவனான 16 வயது தனது மூத்த சகோதரனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த ஓர் இந்தியப் பெண்ணை உயர் நீதிமன்றம் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் நடந்தபோது அந்தப் பெண்ணும், காதலனும், சிறுவர்களாக இருந்ததால், சட்டப்படி அவர்களின் பெயர்கள் வெளியிட தைப்பிங் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. குற்றவாளிகள் இருவரும் பேராக் மாநில சுல்தானின் கருணை கிடைக்கும் வரை சிறார் சட்டப்பிரிவின் கீழ் சிறையில் அடைக்கப்பட வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை 5 ஆம் தேதி இந்த துயரச் சம்பவம் நிகழும் போது, அந்தப் பெண்ணிற்கு 14 வயதும், அவரது காதலனுக்கு 15 வயதும் ஆகியிருந்தது. வீட்டில் ஆள் இல்லாத நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் விட்டுச் சென்ற தனது கைபேசியை வாங்குவதற்காக அந்த இளைஞர் அங்கு வந்துள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணின் அண்ணனுக்கும் இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கொலையில் முடிந்தது. தனது அண்ணணின் சடலத்தை தனது காதலுடன் சேர்ந்து அந்தப் பெண் யாருக்கும் தெரியாத நிலையில் வீட்டிற்கு பின்னால் உள்ள ஒரு காலி வீட்டின் பின்புறம் வீசப்பட்டது.

கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு போர்வையாலும் பிளாஸ்டிக் பையாலும் சுற்றப்பட்ட நிலையில் அந்த மாணவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கழுத்தில் ஏற்பட்ட ஆழமான கத்திக்குத்து காயத்தால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடியதற்கான காயங்களும் உடலில் இருந்தன.

தைப்பிங் உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ருவேனா முகமட் நூர்தின், தனது தீர்ப்பில், "இந்தக் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை என்றாலும், சூழ்நிலை ஆதாரங்கள் குற்றத்தை உறுதிப்படுத்துகின்றன. குற்றவாளிகள் பெரியவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் நான் தயங்கியிருக்க மாட்டேன்," என்று குறிப்பிட்டார்.

மேலும், "ஒன்றாக வளர்ந்த உடன் பிறந்த சகோதரனையே இப்படி கொடூரமாகக் கொன்றது மன்னிக்க முடியாதது. அந்த இளைஞர் மெல்ல மெல்ல இரத்தப்போக்கினால் துடிதுடித்து இறந்தபோது அனுபவித்த வலியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை," என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

குற்றவாளியான இளைஞர் தான் திருந்திவிட்டதாகவும், படிப்பைத் தொடர விரும்புவதாகவும் கூறி மன்னிப்பு கோரினார். அந்தப் பெண் தனக்கு இப்போது திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாகக் கூறி கருணை காட்ட வேண்டினார். இருப்பினும், தனது சகோதரனை இழந்ததற்கு அந்தப் பெண் போதுமான வருத்தத்தை வெளிப்படுத்தவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, அவர்களின் கோரிக்கையை நிராகரித்து தண்டனையை உறுதி செய்தார்.

Related News