Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேவஸ்தானத்தின் கல்வி உபகாரச் சம்பளம்
தற்போதைய செய்திகள்

தேவஸ்தானத்தின் கல்வி உபகாரச் சம்பளம்

Share:

சமயப் பணிகளோடு கல்வி பணியையும் நெடுங்காலமாக மேற்கொண்டுவரும் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம், இந்திய மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி உபகாரச் சம்பளத்தை இன்று வழங்கியது.

உயர் கல்விக்கூடங்களில் இடம் கிடைத்து தொடர்ந்து மேற்கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்த வசதி குறைந்த இந்திய மாணவர்கள் 13 பேருக்கு தலா 5000 வெள்ளி வீதம் மொத்தம் 61,340 வெள்ளி உபகாரச் சம்பளத்தை தேவஸ்தானம் சார்பில் அதன் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ ஆர். நடராஜா வழங்கினார்.

பத்துமலை திருத்தல அலுவலகத்தில் தேவஸ்தானம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு கல்விக்கடன் உதவியை இந்திய மாணவர்களுக்கு தேவஸ்தானம் ஆண்டுதோறும் வழங்கி வந்த போதிலும் கடன் உதவி பெற்ற மாணவர்கள் வேலைக்குச் சென்ற பின்னர் அக்கல்வி கடன் உதவியை திரும்ப செலுத்தாததால் அந்த கல்வி கடன் உதவி நிறுத்தப்பட்டுவிட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டான் ஶ்ரீ நடராஜா தெளிவுப்படுத்தினார்.

எனவே, இந்திய மாணவர்களுக்கு வழங்கக்கூடிய இந்த நிதி உதவி திரும்ப செலுத்த வேண்டிய நிலை இல்லாத சூழலில் கல்வி உபகாரச் சம்பளமாக வழங்குவதென தேவஸ்தானம் முடிவு செய்து அந்த உபகாரச் சம்பளத்தை தற்போது வழங்கி வருவதாக டான் ஶ்ரீ நடராஜா விளக்கினார்.

இன்று கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்களில் ஒருவருக்கு மடிக்கணினியும் வழங்கப்பட்டது.

நிதி உதவி பெற்ற மாணவர்கள் தங்கள் நன்றியை டான் ஶ்ரீ நடராஜா-விற்கும் தேவஸ்தானத்திற்கும் தெரிவித்துக் கொண்டனர்.

தேவஸ்தானம் நெடுங்காலமாக மேற்கொண்டுவரும் இந்த கல்வி பணி தொடரும் என்று உறுதியளித்த டான் ஶ்ரீ நடராஜா, சமயப்பணியையும் கல்வி பணியையும் இரு கண்களாகவே தேவஸ்தானம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.

Related News