நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், அங்கு முன்கூட்டியே மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிரம்பானில் நேற்று இரவு நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயந்திரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றிய அன்வார், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்த தனது அதிருப்தியையும், வருத்தத்தையும், மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன்னிடம் வெளிப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மாநில அரசாங்கம் எடுத்த இந்த முடிவில் தமக்குத் திருப்தி இல்லை என்றாலும் கூட, அம்னோவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழ்நிலையால் தங்களுக்கு “வேறு வழியும் இல்லை” என்று அன்வார் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்த அரசியல் நாடகத்தால் மக்களே தங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று குறிப்பிட்ட அன்வார், அதனால் தான் நாம் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும் விவரித்துள்ளார்.
அதேவேளையில், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானில் இந்த நாடகம் அரங்கேறக் காரணமாக இருந்த அம்னோவின் பொறுமையின்மையையும் அன்வார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் தலைமையிலான மாநில அரசாங்கம், கடந்த எட்டு ஆண்டுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்றும், நெகிரி செம்பிலானில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான ஆணையை பக்காத்தான் கூட்டணிக்கு மக்கள் வழங்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
வறிய மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்யவும், விவசாயிகள், மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அரசாங்கத்திற்கு நிலைத்தன்மை அவசியம் என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இம்முயற்சிகளுக்கு மற்ற கட்சிகள் உதவ வேண்டுமே தவிர, மாறாக அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹாரூன்னுக்கு எதிராக தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றதையடுத்து, நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுத்தாக்கல் ஜுலை 18 ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்குப்பதிவானது ஜுலை 28- ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








