இவ்வாண்டு பள்ளி அமர்வு முடியும் வரையில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி பேருந்து கட்டணத்தின் விலையை அதிகரிக்க எந்தவொரு திட்டமும் இதுவரையில் அமல்படுத்தப்படவில்லை என்று மலேசிய பள்ளி பேருந்து நடத்துநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பழுதடையும் பேருந்துகளின் உதிரிபாகங்களை மாற்றி அமைப்பதில் விலை சற்று அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் இலக்குரிய டீசலுக்கான உதவித்தொகையின் மூலம் அதை ஈடுகட்ட முடியும் என்று அதன் தலைவர் Mohd Rofik Mohd Yusof தெரிவித்தார்.
ஆக, இவ்வாண்டு முழுவதும் பள்ளி பேருந்தின் கட்டணத்தின் விலையில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்பதுடன் முன்னதாக செலுத்தி வந்த கட்டணமே பயணிகளுக்கு தொடரப்படும் என்று Mohd Rofik கூறினார்.
பள்ளி பேருந்தின் கட்டணம் உயர்த்தப்படுமேயானால் இது பொதுமக்களுக்கு குறிப்பாக, பேருந்து சேவையை பயன்படுத்தி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் சுமை அதிகரிக்க செய்யும் என்பதையும் தங்களின் தரப்பு நன்கு உணர்வதாக Mohd Rofik அறிவித்தார்.
இலக்கிடப்பட்ட பேருந்துகளுக்கு fleed card - டின் மூலம் மாதத்திற்கு 1, 800 லீட்டர் டீசல் நிரப்புவதற்கு கோட்டா முறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டா முறையின் வாயிலாக லீட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கு விற்கப்படும் டீசல் விலை லீட்டருக்கு 1 வெள்ளி 88 காசு வீதம் விற்பனை செய்யப்படுவதற்கு வகை செய்யப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஆக, பேருந்து நடத்துநர்கள் தங்களின் சுய விருப்பத்திற்கு ஏற்றவாறு பேருந்து கட்டணத்தின் விலையை அதிகரிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பதை Mohd Rofik வலியுறுத்தினார்.








