புத்ராஜெயா,பிப்.1
ஆவணமற்ற சட்டவிரோதக் குடியேறிகள் பொது மன்னிப்புத் தன்மையிலான நாடு திரும்பும் திட்டத்தை அரசாங்கம் வரும் மார்ச் முதல் தேதியிலிருந்து செயல்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதக் குடியேறிகள், குறிப்பிட்டத் தொகையை அபராதமாக செலுத்திவிட்டு மலேசியாவில் இருந்து தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கு ஏதுவாக இந்த திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தவிருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.
ஆவணமற்ற குடியேறிகள் நாடு திரும்பும் இத்திட்டம் பொது மன்னிப்பு தன்மையிலானதாகும். எனவே அவர்கள் மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது, மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் காலம் தங்கியிருந்தது போன்ற குடிநுழைவு சட்டங்களை மீறிய குற்றத்திற்காக கூடிய பட்சம் 500 வெள்ளி அபராதத் தொகையை செலுத்தி விட்டு நாடு திரும்பலாம். அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமைச்சர் சைஃபுடின் தெளிவுபடுத்தினார்.








