குவாந்தான், டிசம்பர்.03-
பகாங் மாநிலத்தில் எந்தவோர் ஒழுக்கக்கேடான அல்லது விபரீதமான செயல்களும் நடக்கக்கூடாது என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகள் பற்றிய செய்திகளால் தாம் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், இத்தகைய சம்பவங்கள் பகாங் மாநிலத்தில் நடக்கக்கூடாது என்று சுல்தான் நினைவுறுத்தினார்.
கோலாலம்பூர், செள கிட் பகுதியில் ஒரு SPA (ஸ்பா) மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக 208 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இத்தகைய ஒழுக்கக்கேடான நடவடிக்கைக்கு பகாங்கில் இடமில்லை என்று குறிப்பிட்ட சுல்தான், இது போன்ற செயல்களிலிருந்த மக்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதே வேளையில் ஸ்பா மையங்களை ஊராட்சி மன்ற அதிகாரிகள் அணுக்கமாக கண்காணித்து வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இத்தகயை நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கும் தரப்பினர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகாங் மாநில ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கு சுல்தான் உத்தரவிட்டார்.








