கோலாலம்பூர், நவம்பர்.20-
சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை முன்னாள் அமைச்சரின் முன்னாள் அந்தரங்கச் செயலாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 8.8 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை விதித்தது.
7 ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரச் சேவைக்கான குத்தகையை வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 34 வயது முகமட் சைஃபுல்லா முகமட் மிங்குவிற்கு நீதிபதி சுஸானா ஹுசேன் சிறைத் தண்டனையும், அபராதத்தையும் விதித்தார்.
இந்தத் தண்டனை, அவரை வருந்தச் செய்யும் என்பதுடன் எதிர்காலத்தில் திருந்தி வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தும் என்று நீதிபதி சுஸானா ஹுசேன் தமது தீர்ப்பில் தெரிவித்ததுடன் தண்டனை இன்று முதல் அமலுக்கு வருவதாக உத்தரவிட்டார்.
முகமட் சைஃபுல்லா, கடந்த 2020 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டை முன்னிட்டு Inter Bev Network Sdn. Bhd. என்ற விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் Ronald Seto Kong Seng- என்பவரிடமிருந்து 17 லட்சத்து 65 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








