1எம்டிபி ஊழல் விவகாரத்தில், மலேசியாவிற்கு பில்லியன் கணக்கில் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் ஜோ லோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு இன்னும் அமலில் இருப்பதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள ஜோ லோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பொதுமன்னிப்பு கோரியிருந்தாலும் கூட, அவரது நெருங்கிய கூட்டாளியான டான் கிம் லுங் ஆகியோருக்கு எதிரான கைது உத்தரவுகளும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளும் தொடர்ந்து அமலில் உள்ளதாக சிங்கப்பூர் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 1எம்டிபி ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய பல சொத்துகள் இன்னும் சிங்கப்பூர் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையிலோ அல்லது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்ட நிலையிலோ இருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி, மொத்தம் 164 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், 101 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்பிலான சொத்துகள் நேரடியாக ஜோ லோ மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவை என சிங்கப்பூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மலேசிய விசாரணை அதிகாரிகளின் குற்றச்சாட்டின் படி, அரசுக்குச் சொந்தமான 1 மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் முதலீட்டு நிதியிலிருந்து பல பில்லியன் டாலர்கள் முறைகேடாக கையாடப்பட்ட விவகாரத்தில், முக்கிய மூளையாக ஜோ லோ செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், போலி நிறுவனங்களின் வலையமைப்பின் மூலம் அந்த நிதி திருப்பி விடப்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ள ஜோ லோ அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகின்றார்.
இதனிடையே, ஜோ லோவின் பொதுமன்னிப்பு விவகாரத்தில் அண்மையில் கருத்துத் தெரிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஜோ லோவின் எந்த ஒரு மன்னிப்புக் கோரிக்கையையும் அரசாங்கம் பரிசீலிக்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.








