சுங்கை பூலோ, மார்ச்.25-
"corporate mafia" ஊழலைத் தீர்த்து வைப்பதற்கான திட்டத்தில் தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தமக்கு எந்தப் பங்குகளும் இல்லை என்றும் மனித வள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரமணன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தைச் சுமூகமாக முடிக்க 9.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்குமாறு சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விக்டர் சின்னுக்கு (Victor Chin) ரமணன் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.
இன்று பிற்பகலில் சுங்கை பூலோவில் உள்ள தமது சேவை மையத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரமணன், பணத்தைப் பெற்றதாக கூறப்படும் "மிஸ்டர் ஆர் (Mr. R) என்பவர் யார் என்பதற்கு Victor Chin தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், பொறுப்பற்ற சில நபர்கள் இந்த விவகாரத்தில் என் பெயரைத் தொடர்புபடுத்த முயற்சிப்பதை நான் அறிவேன். மில்லியன் கணக்கான பங்குகள் எனக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. உண்மையில், பொதுப் பங்குகள் எதையும் நான் வைத்திருக்கவில்லை - எனது பங்கு இருப்பு, வெறும் பூஜ்ஜியமே," என்று ரமணன் உணர்ச்சிப் பொங்க குறிப்பிட்டார்.
தன்னிலை உணர்வுடன் இருக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இது போன்று மில்லியன் கணக்கான பங்குகளைத் தமக்குத் தாமே மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இத்தகைய பங்குப் பரிமாற்றங்கள் நடந்திருந்தால், அவை பேங்க் நெகாரா மற்றும் பங்குச் சந்தை ஆணையம் போன்ற நிதி நிறுவனங்களால் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளாகக் கண்டறியப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தொழிலதிபர் விக்டர் சின் வெளியிட்ட 40 பக்க ஆவணத்தைத் தொடர்ந்து இந்தப் புகார்கள் எழுந்துள்ளன. பெருநிறுவன கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் எனும் "corporate mafia" ஊழல் விவகாரத்தைத் தீர்க்க ஒரு பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் 10 மில்லியன் ரிங்கிட் கேட்டதாகவும், தொடக்கத்தில் தம்மால் 9.5 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்க முடிந்ததாகவும் விக்டர் சின் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








