ஜொகூர் பாரு, ஜூன் 04-
ஜோகூர், மூவார் நாடாளுமன்ற தொகுதிக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததற்கு, ஒற்றுமை அரசாங்கத்தின் பழிவாங்கும் அரசியலே காரணம் என அதன் உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோஃப் திட்டவட்டமாக மறுத்தார்.
இவ்வாண்டு மட்டுமே, மூவார் நாடாளுமன்ற தொகுதியில், குறைந்தது 60 திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் 2.7 மில்லியன் வெள்ளியை அங்கீகரித்துள்ளதாக அவர் கூறினார்.
அவற்றில், பள்ளிவாசல்களை சீரமைக்க, 741 ஆயிரம் வெள்ளி மதிப்பை உட்படுத்திய 9 திட்டங்களும் 800 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான மக்கள்நலன் சார்ந்த 18 திட்டங்களுக்கு அடங்கும்.
மூவார் நாடாளுமன்ற தொகுதியை ஒற்றுமை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதற்கு அவைகளே போதுமான ஆதரங்களாக உள்ளதாக, ஃபதில்லா யூசோஃப் கூறினார்.
மூவார் தொகுதிக்கான ஒதுக்கீடு குறித்து இருமுறை ஃபதில்லா யூசோஃப் -புடன் பேச்சுகளை தாம் நடத்திய பின்னரும், இதுவரையில் தனது தொகுதிக்கு நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்படவில்லை என சையத் சாதிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூற்று வெளியிட்டிருந்தார்.








