இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான MITRA விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பயன்படுத்தப்படாத நிதிக் குறித்து அரசாங்கம் எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளது என்று Ipoh Barat எம்.பி. M. Kulasegaran இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
பயன்படுத்தப்படாத MITRA நிதி அடுத்தடுத்த பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ளப்படுமா? என்றும் அவர் வினவினார்.
ஒவ்வொரு முறையும் MITRA விற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது கிட்டத்தட்ட பாதி நிதி பயன்படுத்தப்படாமல் அரசாங்கத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்படுவதாக Kulasegaran குறிப்பிட்டார்.
குறிப்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமூகத்திற்காக MITRA விற்கு 10 கோடி வெள்ளி நிதி ஒதுகப்பட்டுள்ளது. இதில் 6 கோடியே 50 லட்சம் வெள்ளி மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதாக Kulasegaran தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 4 கோடி வெள்ளி இந்திய சமுதாயத்திற்குச் சேர்க்கப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்படும் MITRA நிதி இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் அடுத்தடுத்த பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அந்த நிதி முழுமையாக இந்திய சமுதாயத்திற்குச் சென்றடைய வேண்டும், அதற்கான வழிமுறையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று Kulasegaran கேட்டுக்கொண்டார்.








