நாளை மறுநாள் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப் பெறுமானால், நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் அரசாங்கம் அனுபவித்து வரும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அந்த கூட்டணி இழக்கலாம் என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல், தங்கள் விருப்பம் போல் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவாக இருந்தாலும் தங்களின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் கலந்து ஆலோசிக்காமல் எந்தவொரு முடிவும் எடுக்க இயலாது. அந்த அளவிற்கு பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் அரசாங்கம் தள்ளப்படலாம் என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான ஹம்சா சைனுடின் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் செயல்படும் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் கூட்டணியின் அந்த பெரும்பான்மையை உடைக்க வேண்டும். அதற்கு பூலாய் இடைத் தேர்தல் வழிகோலிட வேண்டும் என்று ஹம்சா சைனுடின்வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.







