பெர்சாத்து கட்சியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு அதன் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி தான் காரணம் என்பதை முன்னாள் பிரதமர் முஹ்யிதீன் யாசின் மறுத்துள்ளார்.
அஸ்மினுக்கு விரிவான அரசியல் அனுபவம் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள முஹ்யிதீன், பெர்சாத்து கட்சியில் அஸ்மின் தன்னை இணைந்துக் கொண்ட பிறகு, அவருக்குச் சாதகமான சூழ்நிலைகள் அங்கு அமையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிகேஆர் துணைத் தலைவரான அஸ்மினை, பெர்சாத்து கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பொதுச் செயலாளராக நியமித்ததாகவும், தற்போது வரை அவர் தனது கடமைகளை தொழில் ரீதியாக வழக்கம் போல் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை அஸ்மினுக்குச் சாதகமாக தான் செயல்பட்டிருந்தால், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்சாத்து கட்சித் தேர்தலின் போது, துணைத் தலைவராக ஹம்சா ஜைனுதீன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார் என்றும் முஹ்யிதீன் தெரிவித்துள்ளார்.
அஸ்மினை தான் ஆதரித்திருந்தால், அவரே துணைத்தலைவராக பதவி ஏற்றிருப்பார் என்று கூறியுள்ள முஹ்யிதீன், அவ்வாறு தான் செய்யவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றும் விவரித்துள்ளார்.
மேலும், பெர்சாத்துவின் முன்னாள் துணைத் தலைவர் அகமது ஃபைசால் அஸுமு, கட்சியின் இணை நிறுவனர்களில் ஒருவராக இருந்தபோதிலும் கூட, ஹம்சா துணைத்தலைவராகப் பொறுப்பேற்க, அவர் பெருந்தன்மையுடன் வழிவகுத்தார் என்றும் முஹ்யிதீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பேராக் மந்திரி பெசாரான ஃபைசால், கடந்த 2024 ஆம் ஆண்டு பெர்சாத்து துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கப் போவதில்லை என்று ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாகவே ஹம்சா போட்டியின்றி அந்தப் பதவிக்குப் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் முஹ்யிதீன் தெரிவித்துள்ளார்.








