மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-ஐச் சேர்ந்த சில அதிகாரிகள், நிறுவனங்களை கையகப்படுத்தும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, RCI என்றழைக்கப்படும் ஓர் அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு அரசாங்கத்தை, ஜசெக வலியுறுத்தியுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற ஜசெக கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்றாகும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
SPRM-இன் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அரசாங்கம் அதன் மீதான குற்றச்சாட்டுகளை திறம்படக் கையாள வேண்டும் என்று ஜசெக தலைமையகம் வலியுறுத்தியுள்ளதாகவும் லோக் சியூ குறிப்பிட்டுள்ளார்.
அக்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், SPRM-இன் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் நோக்கிலும், RCI அமைக்கப்பட வேண்டும் என்றும் லோக் சியூ இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிறுவன கையகப்படுத்துதலை கட்டாயப்படுத்த மிரட்டல் "சேவைகளை" வழங்கியதன் மூலம், சில SPRM அதிகாரிகள் பெருநிறுவன சூழ்ச்சிகளில் ஈடுபட்டதாக பிரபல செய்தி நிறுவனமான Bloomberg தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








