Apr 19, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு
அரசியல்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

Share:

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு முன்னால் உள்ள சட்டவிரோதக் கோயிலை இடிக்கத் தான் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சமயப் போதகர் ஜம்ரி வினோத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜம்ரி விநோத் , தானோ அல்லது தனது ஆதரவாளர்களோ அந்த ஆலயக் கட்டடத்திற்கு எதிராக எந்தவொரு நேரடி நடவடிக்கையையும் எடுக்கப் போவதாகக் கூறவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

"நாங்கள் எப்போது அந்த இடத்தை இடிக்கப்போவதாகக் கூறினோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தனது கருத்துகள் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிராந்திய சட்டங்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தான் அவ்வாறு பேசியதாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவமனைக்கு முன்னால் உள்ள அந்த ஆலயம் பொதுமக்களின் அவசரத் தேவைக்கான போக்குவரத்துப் பாதையை மறைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

"நாங்கள் அரசாங்கத்திடம் தான் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், அந்த இடத்தை அகற்றுமாறும் கோருகிறோம். இதற்கும் நாங்கள் இடிக்கப் போவதற்கும் வித்தியாசம் இருக்கிறது," என்று அவர் விளக்கமளித்தார்.

முன்னதாக, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு முன்னால் உள்ள ஒரு இந்து கோயிலை இடிக்கப் போவதாக ஜம்ரி வினோத் அச்சுறுத்தல் விடுத்ததாகவும், வரும் மார்ச் 7-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு இச்சம்பவம் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறி, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் நேற்று போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பெயர் குறிப்பிடாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைச் சாடிய ஜம்ரி வினோத், அந்தப் பிரதிநிதி இனவாத அரசியலை முன்னெடுப்பதாகவும், சட்டப்பூர்வ உண்மைகளை மறைக்கப் பொய்ப் புகார்களை அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Related News