கோலாலம்பூர், ஆகஸ்ட்.09-
அம்னோவிலிருந்து விலகி, பிகேஆர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்த முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அஸிஸ், சிலாங்கூர் அம்பாங் பிகேஆர் தொகுதியில் ஓர் உறுப்பினராக இணைந்துள்ளார்.
பிகேஆர் கட்சியில் ஓர் உறுப்பினராகச் சேர்வதற்குத் தாம் செய்து கொண்ட விண்ணப்பம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.
அம்னோவில் கோத்தா ராஜா டிவிஷன் தலைவராக இருந்த தெங்கு ஸாஃப்ருல், அந்தப் பதவியை ராஜினாமா செய்ததுடன் அம்னோவிலிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.
செனட்டர் மூலம் அமைச்சர் பதவியை வகித்து வரும் தெங்கு ஸாஃப்ருலின் செனட்டர் பதவிக் காலம் முடிவுறும் நிலையில், அவர் அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் பிகேஆர் கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக விளங்கும் அம்பாங்கில் தெங்கு ஸாஃப்ருல் ஓர் உறுப்பினராக சேர்ந்து இருப்பது, இடைத் தேர்தலுக்கு வழி வகுக்கப்படுமா? என்ற ஆருடங்கள் வலுத்து வருகின்றன.