ஷா ஆலாம், ஜூலை.19-
நாட்டில் அரசியல் அவதூறுகள், அச்சப்படும் நிலையை எட்டியுள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வருத்தம் தெரிவித்தார்.
இத்தகைய அடிப்படையற்றக் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும், நேர்மையுடன், நெஞ்சுரம் கொண்டு, முழு வீச்சில் எதிர்த்துப் போராட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
இங்கும் அங்கும் கிசுகிசுக்க வேண்டாம். அதிகாரத்தில் அமர ஆசையிருந்தால் மார்தட்டிக் கொண்டு முன் வர வேண்டுமே தவிர நாட்டையோ அல்லது தனிநபர்களையோ களங்கப்படுத்தும் கதைகளை உருவாக்காதீர்கள் என்று கட்சி உறுப்பினர்களை ரமணன் கேட்டுக் கொண்டார்.
உண்மையைச் சொல்வதால் தாம் யாருக்கும் பயப்படப் போவதில்லை என்று குறிப்பிட்ட ரமணன், தாம் வெளிப்படையாகப் பேச விரும்புவதாகவும், அதிகரித்து வரும் நாள்பட்ட மற்றும் பரவலான அவதூறுகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும் என்றும் பிகேஆர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
நேற்று ஷா ஆலாமில் சிலாங்கூர் கெஅடிலான் கட்சித் லைவர்களுடனான சந்திப்பு மற்றும் கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சருமான ரமணன் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மை வலிமையாக உள்ளது. கடந்ததைப் பற்றி சிந்திக்க வேண்டாம். பிகேஆர் நமது கட்சி, நமது வீடு. அதனைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாம் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களை ரமணன் கேட்டுக் கொண்டார்.