ஷா ஆலாம், ஜூலை.18-
சில விவகாரங்களைப் பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் பேசியிருக்கும் பிகேஆர் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டம் கொண்டிருக்கவில்லை என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் வரம்பு மீறாமல் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க உரிமைப் பெற்றுள்ளனர் என்று கட்சித் தலைவர் கருதுவதாக டத்தோ ஃபாமி விளக்கினார்.
நீதித்துறையில் நெருக்கடி இருப்பதாகக் கூறி, அது குறித்து விசாரணை செய்வதற்கு விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி உட்பட கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தது தொடர்பில் டத்தோ ஃபாமி கருத்துரைத்தார்.
இத்தகையக் கோரிக்கை விடுப்பதால் தாங்கள் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ரஃபிஸி ரம்லி நேற்று அச்சம் தெரிவித்து இருந்தார்.