கோத்தா கினபாலு, செப்டம்பர்.05-
வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணியான கபுங்கான் ரக்யாட் சபா எனப்படும் ஜிஆர்எஸ்ஸுடன் பாரிசான் நேஷனல் ஒத்துழைப்பு கொள்ளாது என்று அந்தக் கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி இன்று அறிவித்துள்ளார்.
எனினும் சபா சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைப்பு கொள்ளும் என்று துணைப்பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.
ஜிஆர் எஸ்ஸுடன் எந்தவொரு ஒத்துழைப்பும், ஒட்டுறவும் இல்லை என்று இன்று கோத்தா கினபாலுவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஹ்மாட் ஸாஹிட் இதனை அறிவித்தார்.
முன்னதாக, சபா அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் தலைமையிலான மாநில அம்னோ உயர் மட்டத் தலைவர்களுடன் அஹ்மாட் ஸாஹிட் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
சபா சட்டமன்றம் வரும் நவம்பர் 11 ஆம் தேதியுடன் 5 ஆண்டு தவணைக் காலம் இயல்பாகவே நிறைவு பெறுகிறது. அது 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிட வேண்டும்.