கங்கார், ஆகஸ்ட்.05-
பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு மஇகா, மசீச ஆகிய கட்சிகளுடன் இணைந்து அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கு பாஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜசெக.வைத் தவிர வேறு எந்த கட்சியுடனும் இணைந்து பணியாற்றுவதில் இஸ்லாமைத் தளமாகக் கொண்ட பாஸ் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அக்கட்சியின் ஆன்மிகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் தெரிவித்துள்ளார்.
அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கு எந்தவொரு கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மஇகா தயார் என்று அதன் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், கடந்த சனிக்கிழமை சுங்கை சிப்புட்டில் அறிவித்திருந்த நிலையில், பாஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ஹாஷிம் ஜாசின், பாஸ் கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
மஇகா, மசீச ஆகிய கட்சிகளுடன் அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கு பாஸ் கட்சி கொள்கை அளவில் தயார் என்று அந்த ஆன்மிகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த ஒத்துழைப்பு, சாத்தியமாக மாறுவதற்கு உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை மற்றும் விவாதங்கள் நடத்தப்படுவது அவசியமாகின்றன என்று உத்துசான் மலேசியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஹாஷிம் ஜாசின் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரும் 16 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியமும், அவசரமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த வலிமையானது, பிற கட்சிகளை அரவணைத்து, கூட்டு சேர்வது மூலமே சாத்தியமாகும் என்று ஹாசிம் ஜாசின் குறிப்பிட்டார்.