பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் பாஸ் கட்சி இணையுமானால் அம்னோவின் ஆதிக்கம் பெரியளவில் பாதிக்கும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.
6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு அதிகளவில் கிடைத்துள்ளது.
பாஸ் கட்சிக்கு மலாய்க்காரர்களின் மத்தியில் ஆதரவும் செல்வாக்கும் அதிகரித்து இருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் ஒற்றுமை அரசாங்கத்தல் பாஸ் கட்சி சேரும் சூழ்நிலை உருவாகலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் கோடிகாட்டினார். இதன் தொடர்பில் நடப்பு அரசாங்கத்தில் பாஸ் கட்சி ஓர் அங்கமாக இணையுமானால் அம்னோவின் நிலை ஆட்டம் காணலாம் என்று அரசியல் ஆய்வாளர் அகாடமி நுசன்தாரா கல்விக்கழகத்தை சேர்ந்த அஸ்மி ஹஸ்சான் தெரிவித்தார்.








