Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தெங்கு ஸாஃப்ருல் விவகாரத்தை நல்ல முறையில் தீர்ப்பீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெங்கு ஸாஃப்ருல் விவகாரத்தை நல்ல முறையில் தீர்ப்பீர்

தாப்பா, ஜூன்.01-

தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகி, பிகேஆரில் இணைய முற்பட்டு இருப்பதைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் பாரிசான் நேஷனல் தலைமைத்துவம் விவேகமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேட்டுக் கொண்டார்.

வர்த்தகம், முதலீடு, தொழில் துறை அமைச்சரான தெங்கு ஸாஃப்ருல் விவகாரம் தொடர்பில் பாரிசான் நேஷனல் ஒருமித்த விவாதங்கள் நடத்த வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

தெங்கு ஸாஃப்ருல், அம்னோ உறுப்பினராக இருந்தாலும், இந்தப் பிரச்னையானது, அந்தக் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. மாறாக, ஒட்டு மொத்த பாரிசான் நேஷனலின் நலன்களையும் இது உள்ளடக்கியுள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தற்போது பதவிகளை வகித்துக் கொண்டு இருப்பவர்களும் பாரிசான் நேஷனல் கொள்கைகள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவர்களே தவிர ஏதோ ஒரு கட்சிக்கு உரிமைக் கொண்டவர்கள் அல்ல.

எனவே தலைமைத்துவத்தில் இருப்பவர்கள், தங்களை பாரிசான் நேஷனல் தலைவர்கள் என்கின்ற ரீதியில் சிந்திக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது.

ஏனென்றால், பாரிசான் நேஷனல் என்பது குறிப்பிட்ட கட்சியை மட்டும் சார்ந்து இருக்கவில்லை. மாறாக, பல கட்சிகள் இணைந்த நிலையில், அது ஒரு கூட்டணியாக செயல்படுகிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் விளக்கினார்.

இன்று தாப்பா, துன் அஹ்மாட் சர்ஜி மினி அரங்கில் தாப்பா தமிழன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்பத்தின்மர் கால்பந்தாட்டப் போட்டியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சரவணன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →