சரவாக் மாநில சட்டமன்றம் வரும் நவம்பர் மாதத்தில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அம்மாநில சுற்றுலா, கலை, புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் காரிம் ரஹ்மான் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
வரும் 2027-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டம் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சரவாக் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் 2027 பிப்ரவரியில் தானாக முடிவடைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அப்துல் காரிம் தெரிவித்துள்ளார்.
சரவாக் மாநிலத்தைப் பொறுத்தவரை வழக்கமாக மந்திரி பெசாரோ அல்லது ஆட்சியாளரோ, சட்டமன்றத்தைக் கலைக்குமாறு கோருவார் என்றும், தற்போது அக்டோபர் மாதம் என்பதால் தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகத் தகவல்களின்படி, சரவாக் மாநில சட்டமன்றக் கூட்டம் வரும் அக்டோபர் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில், குறிப்பாக வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சட்டமன்றம் கலைக்கப்படலாம் என அப்துல் காரிம் தெரிவித்துள்ளார்.








