போக்குவரத்து அமைச்சர் பதவியைத் தாம் ராஜினாமா செய்தது தொடர்பாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இதுவரை சந்திக்கவில்லை என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி தாம் உடனடியாகப் பதவி விலகியதாகவும், தன்னைப் பொறுத்தவரை ராஜினாமா முடிவில் மாற்றமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று சிலாங்கூர் ஜசெக மாநில மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக், தாம் இன்னும் போக்குவரத்து அமைச்சராக இருக்கிறாரா என்பதைப் பிரதமரிடமே கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 10ஆம் தேதி அந்தோணி லோக் பதவி விலகியிருந்தார்.
இதனிடையே, அந்தோணி லோக்கின் ராஜினாமா கடிதத்தைத் தாம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அவருடன் கலந்துரையாட விரும்புவதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகத் தெரிவித்திருந்தார். மேலும், பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.








